பிரச்சனையை சும்மா விட மாட்டோம்- டெல்லியில் வரும் 22ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்!

தலைநகர் டெல்லியில் வரும் 22ஆம் தேதி திமுக சார்பில் அனைத்து கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமலில் இருந்த சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து, மத்திய அரசு அரசாணை வெளியிட்டது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த சூழலிலும், வெற்றிகரமாக காஷ்மீர் மீதான மசோதாக்களை பாஜக அரசு நிறைவேற்றிக் காட்டியது.

முன்னதாக ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறி, வரலாற்றில் இல்லாத அளவிற்கு பாதுகாப்பு போடப்பட்டது. நாடாளுமன்றத்தில் காஷ்மீர் மசோதாக்கள் நிறைவேற்றும் தருணத்தில், அம்மாநிலத்தின் அரசியல் கட்சி தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக வரும் 22ஆம் தேதி, டெல்லியில் திமுக சார்பில் அனைத்துக் கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் காலை 11 மணியளவில் எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வர். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைத்துக் கட்சி எம்.பிக்களும் கலந்து கொள்வர். அடக்குமுறைகள், ஊரடங்கு உத்தரவு மூலம் காஷ்மீரை பாஜக அரசு தனிமைப்படுத்தி வைத்துள்ளது. அங்கு அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நீடிக்கிறது. அரசியல் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்து அடிப்படை உரிமைகளை பறித்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *