தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் காலியாக உள்ள 1,311 விரிவுரையாளர் பணிகளை, தற்காலிக முழுநேர விரிவுரையாளர்களைக் கொண்டு நிரப்ப தமிழ்நாடு ஆசிரியர் வாரியம் முழுமூச்சில் இறங்கியுள்ளது.
இதனால், ஏஐசிடிஇ நெறிமுறைகளின் படி ஆசிரியர்/மாணவர் விகிதம் பொறியயல் கல்லூரிகளில் 1:20 என்ற கணக்கிலும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1:25 என்ற கணக்கிலும் இருக்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது.
நியமிக்கப்படும் இந்த தற்காலிக முழுநேர விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.15,000 தரப்படும் என்று நம்பப்படுகிறது.
விரிவுரையாளர் நியமிப்பதில் ஏற்பட்ட குளறுபடி
ஆசிரியர் தேர்வு வாரியத்தால், அரசு தொழில்நுட்ப கல்லூரி (பாலிடெக்னிக்) விரிவுரையாளர்கள் நேரடி நியமனத்துக்காக 16.9.2017 அன்று நடத்தப்பட்ட எழுத்துத்தேர்வு ரத்து போட்டி பல்வேறு குளறுபடி காரணமாக செய்யப்பட்டது. மொத்தம் 156 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த, வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்து வருவதால் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த இரண்டு வருடங்களாக எந்த விரிவுரையாளரையும் நியமிக்க முடியாமல் இருந்தது.
இந்நிலையில், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் தேர்வு நடத்தி விரிவுரையாளர்களை நியமிக்க எந்த தடையும் இல்லை என்று உத்தரவு கொடுத்திருந்தது. இதனால், நிரந்தர விரிவுரையாளர்களை நியமிக்கும் வரை தற்காலிக விரிவுரையாளர்களை அவசரமாக நியமிக்க ஆசிரியர் வாரியம் முடிவு செய்துள்ளது.
இந்த முழுநேர தற்காலிக விரிவுரையாளர்கள் பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் மாதம் முற்பகுதியில் வரும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.