எங்களை போல் நீதிமன்றத்தால் கூட நீட் தேர்வை ஏற்க முடியவில்லை- மு.க. ஸ்டாலின் கவலை

Image result for stalin dmk

உயர் நீதிமன்றம் காட்டும் சமூக நீதிப் பாதையில் மத்திய, மாநில அரசுகள் செல்ல வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மருத்துவக் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான இடங்களை முறையாக நிரப்ப உத்தரவிடக் கோரி, தீரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த மனு, நேற்று நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு அளித்த அறிக்கையில், ‘தனியார் பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவர்களே அதிக அளவில் மருத்துப் படிப்பில் சேர்ந்துள்ளனர்’ என்று கூறப்பட்டிருந்தது. அந்த அறிக்கையின்படி, மருத்துவப் படிப்பில் சேர்ந்த 3,081 மாணவர்களில் 48 மாணவர்கள் மட்டுமே நீட் பயிற்சி மையத்தில் பயிலவில்லை. மீதமுள்ள அனைத்து மாணவர்களும் பயிற்சி மையத்தில் படித்துள்ளனர்.

Image result for high court chennai
அதனால், அதிருப்தி அடைந்த நீதிபதிகள், ’நீட் தேர்வால் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு பாதிக்கப்படுகிறது. ஏன், மத்திய, மாநில அரசுகள் நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது’ என்று கேள்வி எழுப்பியிருந்தது.

நீதிபதிகளின் ஆதங்கம் அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்த மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், ‘ஏழை – எளிய மக்களின் மருத்துவக் கல்விக் கனவை நீட் சிதைக்கிறது என நாம் சொன்னபோதெல்லாம் மத்திய அரசு உள்நோக்கம் கற்பித்தது.

இப்போது சென்னை உயர்நீதிமன்றமே அதனை வழிமொழிந்துள்ளனர். இப்போதாவது நீதிமன்றம் காட்டும் சமூகநீதிப் பாதையில் மத்திய – மாநில அரசுகள் செல்ல வேண்டும்!’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *